Monday, January 16, 2017

மிக்ஸ்ட் பார்பிகியூ சிக்கன் / Mixed Chicken Barbecue


அமீரகத்தில் பொதுவாக  பார்க், பீச்சில் குளிர் காலத்தில் குடும்பத்தோடு உட்கார்ந்து  பார்பிகியூ செய்து சாப்பிடுவது சாதாரணமாக காணப்படும் ஒரு நிகழ்வு.
இங்கு வீட்டில் முன்னாடி,பின்னாடி, சைடில் திறந்த வெளி  இடம் இருப்பதால் செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தது தான் இது.

தந்தூரி சிக்கன் பார்பிகியூ:
தேவையான பொருட்கள்;-
சிக்கன் - 1 கிலோ
சிக்கனில் ஊற வைக்க மசாலா தயார் செய்ய வேண்டும்.
தந்தூரி மசாலா பேஸ்ட்  தயாரிக்க:-
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை - 1
காஷ்மீரி மிள்காய்த்தூள் - 1  அல்லது 2 டீஸ்பூன்(காரம் அவரவர் விருப்பம்)
கரம் மசாலா -கால் -  அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு.
இறுதியாக மேலே தடவ:-
பட்டர் - சிறிய துண்டு.
செய்முறை:- 
முதலில் மேற்சொன்னபடி பேஸ்ட் தயார் செய்து  கொள்ளவும்.
 கழுவி, வடிகட்டிய சிக்கனை பேஸ்டில் ஊற வைக்க வேண்டும்.
குறைந்தது 3-4 மணி நேரம் இருக்கட்டும்.
பின்பு பார்பிகியூ செய்ய அடுப்பை தயார் செய்து கொண்டு சிக்கனை கம்பி தட்டில் அடுக்கி கனலில் இரு புறமும் வேகுமாறு சுட்டு எடுக்க வேண்டும்.



சுவையான பார்பிகியூ சிக்கன் தயார். சிக்கனை எடுத்து பட்டர் தடவி அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைக்கவும். பரிமாறும் வரை வெது வெதுப்பாக இருக்கும்.
மசாலா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி போடுவதுண்டு. ரெடி மேட் டிக்கா அல்லது பார்பிகியூ  மசாலா கூட உபயோகிக்கலாம்.

பார்பிகியூ ஹரியாலி சிக்கன் டிக்கா
தே.பொ:-
சிக்கன் போன்லெஸ் – அரைக்கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் குவியலாய் – 1 டீஸ்பூன்
கெட்டித்தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
கசூரி மேத்தி – 1-2 டீஸ்பூன் (விரும்பினால் – நல்ல மணமாக இருக்கும்)
எண்ணெய் – 2 டீஸ்பூன்
அரைக்க:-
மல்லி, புதினா, கருவேப்பிலை – தலா ஒரு கையளவு
பச்சை மிளகாய் – 3 (காரம் அவரவர் விருப்பம்)
எலுமிச்சை பழம் ஜூஸ் (சிறியது )– 1
உப்பு – தேவைக்கு.
செய்முறை:-
போன்லெஸ் சிக்கன் துண்டுகளை ஒரே போல் கட் செய்து அலசி தண்ணீர் சுத்தமாக வடிய வைக்கவும்.
மரக்குச்சியை தண்ணீரில் ஊற விடவும்.
மல்லி,புதினா,கருவேப்பிலை,பச்சை மிளகாயை லெமன் ஜூஸ், சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். லெமன் ஜூஸ் சேர்த்து அரைத்தால் பச்சையாகவே இருக்கும்,நிறம் மாறாது.
சிக்கனுடன்,இஞ்சி பூண்டு பேஸ்ட், கெட்டி தயிர்,கரம் மசாலா,அரைத்த விழுது,கசூரி மேத்தி,எண்ணெய், உப்பு சிறிது தேவைக்கு சேர்த்து குறைந்தது 1-2 மணி நேரமாவது ஊற வைக்கவும். முதல் நாளே செய்தும் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
பின்பு பார்பிகியூ அடுப்பில் நெருப்பு கணல் வந்தவுடன் மரக்குச்சியில் சிக்கனை கோர்த்து கம்பி தட்டில் வைத்து இரு புறமும் நன்கு வேகுமாறு சுட்டு எடுக்கவும்.
சுவையான ஹரியாலி சிக்கன் டிக்கா தயார்.
 சுட்ட சிக்கன் கோஃப்தா கபாப் /BBQ chicken kofta kebab
தே.பொ:-
சிக்கன் போன்லெஸ் – கால் கிலோ
பொடியாக சாப் செய்த வெங்காயம் – 1 ( தண்ணீரை பிழிந்து கொள்ளவும்)
நறுக்கிய மல்லி புதினா – சிறிது
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
முட்டை வெள்ளைக்கரு – 1
இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது –தலா 1 டீஸ்பூன்
மிளகு,சோம்பு, சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு.
செய்முறை:
எல்லாம் சேர்த்து மிக்ஸியில் கலந்து அரைத்து எடுக்கவும்.மிக்ஸ் சிக்கென்று இருக்க வேண்டும்.
தளர்வாக இருந்தால் ப்ரெட் துண்டு ஒன்றை பொடித்து சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மரக்குச்சியை அரைமணி தண்ணீரில் ஊற வைக்கவும்.
அனைத்தையும் கலந்து கபாப் போல் உருட்டி மரக்குச்சியில் வைத்து பார்பிகியூ அடுப்பில் கிரில் செய்து எடுக்கவும்.
சுவையான ஹெல்தி சுட்ட சிக்கன் கோஃப்தா கபாப் ரெடி.
வெஜ் சாலட்டுடன் பரிமாறவும்.

அடுப்பு கனலில் வெங்காயம் வைத்து சுட்டும் பரிமாறினால் சூப்பர்.இதே அடுப்பில் மக்காச்சோளம் சுடலாம். கெட்டில் வைத்து ப்ளாக் டீ  கூட போடலாம்..


Thursday, January 12, 2017

ஈசி ரஸ்மலாய் / Easy Rasmalai

 உங்களுக்கு கொஞ்சமாக முயற்சி செய்து பார்க்கும்படி இந்த குறிப்பைக் கொடுக்கிறேன். டேஸ்ட் சூப்பராக இருக்கு. ஆனால் இது முட்டை சேர்த்து செய்வது.முட்டை சேர்த்தேன்னு நீங்க சொன்னால் கூட நம்ப மாட்டாங்க. பிடிச்சவங்க முயற்சி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள் & செய்முறை:-
முதலில் செய்ய வேண்டியது.
பால் - 2 கப்
தண்ணீர் - ஒரு கப்
சர்க்கரை - அரை கப் - ஒரு கப்
சாஃப்ரான் - பெரிய பின்ச்

 மேற்சொன்ன அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். விரும்பினால் சிறிது ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்.
 ஒரு கப் பால் மாவிற்கு  மாவிற்கு கால் டீஸ்பூன் பேக்கிங் பவுடர், ஒரு  சிறிய அளவிலான முட்டை  சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து கொள்ளவும்.
 நான் கொஞ்சம் அதிகமாக செய்ததால் இரண்டு முட்டை சேர்த்தேன்.
 மாவு பிசைந்து ரெடி செய்து சிறிய உருண்டையாகவோ அல்லது சிறிய வடை மாதிரியோ தட்டிக் கொள்ளவும்.
பிசு பிசுன்னு இருந்தால் சிறிது நெய் தொட்டு மாவை எடுத்து தட்டவும்.
 கொதிக்கும் பாலில் ஒவ்வொன்றாக போடவும்.
 அடுப்பில் சிம்மில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.அகலமான பாத்திரத்தில் போடவும். இல்லையெனில் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நடுவில் வேகாமல் இருந்து விடும்.
வெந்த பின்பு இப்படி அழகான எலுமிச்சை நிறத்தில் வந்து விடும்.
சுவையான ரஸ்மலாய் தயார்.
பிஸ்தா பருப்பை ஊறவிட்டு தோல் எடுத்து பொடியாக நறுக்கி அலங்கரித்துப் பரிமாறவும்.
பிடித்திருந்தால் செய்து பாருங்க.பிள்ளைங்களுக்கு செய்து கொடுங்க.

Monday, January 9, 2017

எலும்புச் சாம்பார் / Elumbu sambar / Mutton bone sambar


ஊரில் இருந்து முருங்கை,மாங்காய், வெள்ளைக் கத்திரிக்காய் (இங்கே கிடைக்காது)  வந்தது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப கொஞ்சம்  ஆட்டு எலும்பு  ஃப்ரிட்ஜில் இருந்தது. தால்ச்சாவும் செய்யலாம்.ஆனால் எலும்பு சாம்பார் குறிப்பு முன்பு சிம்பிளாக அறுசுவையில் கொடுத்த நினைவு..இங்கே பகிரவில்லை,எனவே செய்து பகிர்ந்தாச்சு.கிட்டதட்ட தால்ச்சா மாதிரி தான்.
 தேவையான பொருட்கள்;-
துவரம் பருப்பு - 100 கிராம்
கத்திரி, முருங்கை, மாங்காய்,தடியங்காய் - சேர்த்து கால் கிலோ அல்லது உங்க தேவைக்கு.
எலும்பு - 150 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லி,கருவேப்பிலை - சிறிது.
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 1டீஸ்பூன் குவியலாய்.
கரம் மசாலா - கால் டீஸ்பூன்(ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
புளித்தண்ணீர் - பெரிய நெல்லியளவு ஊற வைக்கவும்.
உப்பு - தேவைக்கு.
தாளிக்க :-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை - 2 இணுக்கு
வெங்காயம் - நறுக்கியது - சிறிது
பெருங்காயப் பொடி - சிறிது

செய்முறை:-
காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
 குக்கரில் தேவைக்கு தண்ணீர் விட்டு எலும்பு துண்டுகள், மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு, கரம் மசாலா,சிறிது உப்பு சேர்த்து  மூன்று விசில் வேக வைக்கவும்.

 மட்டன் போன் வெந்த பின்பு அத்துடன் ஊறிய பருப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்து வைக்கவும்.

 இப்ப மட்டன் போனுடன் பருப்பும் வெந்து தயாராகி விட்டது.
 சாம்பார் பொடி போட்டு,மாங்காய் தவிர,  நறுக்கிய அனைத்து காய்கறிகள்,, வெங்காயம்,தக்காளி சேர்த்து வேக வைக்கவும்.
 காய்கள் வெந்த பின்பு கொஞ்சமாக புளித்தண்ணீர் விடவும்.
 கொதிவரும் பொழுது தேவைக்கு மாங்காய் சேர்க்கவும்.
 வேக வைத்த பருப்பு,மட்டன் எலும்பு சேர்க்கவும்.
 கலந்து விட்டு உப்பு சரிபார்த்து கொதிக்க விடவும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.

 தாளிக்க கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல், கருவேப்பிலை போட்டு வெடித்த பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொதித்த எலும்பு சாம்பாரில் கொட்டவும்.

சுவையான எலும்புச் சாம்பார் தயார். 

இதனை வெறும் சோறு, பிரியாணி, நெய்ச் சோறு,தேங்காய்ச்சோறு,இட்லி,தோசை எது கூட வேண்டுமானாலும் பரிமாறலாம்.