Friday, January 10, 2014

சிறப்பு விருந்தினர் பகிர்வு - 9 - திருமதி மனோ சாமிநாதன் - பொங்கல் குழம்பு / Pongal Kuzhambu


திருமதி மனோ சாமிநாதன் ,மனோ அக்கா என்று தமிழ் வலையுலகில் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான மூத்த பதிவர், பசுமை கொஞ்சும் தஞ்சை மண்ணை பூர்வீகமாகக் கொண்டவர், சமையற்கலை நிபுணர், பத்திரிக்கையாளர், ஓவியர், இசையில் ஆர்வமுள்ளவர் இன்னும் அவரிடம் கொட்டிக் கிடைக்கும் திறமைகள் பல. அவர்களை சிறப்பு விருந்தினராக இந்த பொங்கல் சமயம் அழைத்து கௌரவிப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

நான் இந்தப் பகிர்வு ஆரம்பித்த புதிதில் அக்காவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பொழுது பொங்கல் சமயம்  சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ளும் படி கேட்டதற்கிணங்க பல நாட்கள் முன்பே எனக்கு குறிப்பை அனுப்பி தந்தது எனக்கு அதீத மகிழ்ச்சியைத் தந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !


மனோஅக்காவின் சுய அறிமுகம்:

மிகச் சிறிய வயதிலிருந்து அனைத்துக் கலைகளிலும் ஆர்வம் அதிகம். ஓவியம், இசை, தமிழ், ஆங்கில் நூல்கள் இவற்றுக்கிடையே சமையல் கற்கும் ஆர்வம் என்றிலிருந்து தொடங்கியது என்று நினைவில்லை. 14 வயதில் தொடங்கி புதிய குறிப்புகளை செய்து பார்ப்பதிலும் தேடிப்போய் குறிப்புகள் சேர்த்து செய்வதிலும் இன்று வரை [ 60 வயதிற்கு மேலும்] உற்சாகம் குறைந்ததில்லை. சமையல் மேல் கொண்ட காதல் தான் காரணம் என்று நினைக்கிறேன். 37 வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் வாழ வந்தபோது கண‌வர் உணவகம் தொடங்கியதும் மகனும் அது சம்பந்தமான படிப்பையே வெளிநாடுகளில் படித்து வந்ததும் பல வித சமையல் குறிப்புகள் கற்கும் ஆர்வத்தை வளர்த்து விட்டது. எனினும் புதிய நவீன குறிப்புகள் செய்து பார்ப்பதை விட, பழமையான குறிப்புகளை தேடிக்கற்கும் ஆர்வம் தான் அதிகம் உள்ளது.

2004லிருந்து கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பல நூறு சமையல் குறிப்புகள் கொடுத்து, 13 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்களைப்
பெற்றிருக்கிறேன்.

அதிலுள்ள சில குறிப்புகள் மட்டும் கீழ்க்கண்ட என்னுடைய தளத்தில் போட்டிருக்கிறேன். தொடர்ந்து போட இயலாதிருக்கிறது.


அடுத்து கீழ்க்கண்ட தளத்தில் குறிப்புகள் கொடுத்திருக்கிறேன்.

அப்புறம் என் வலைத்தளங்கள்:


ஆசியா உமர் என் இனிய சகோதரி. சில வருடங்களுக்கு முன் நேரில் பார்த்தபோது அவரிடம் நான் கண்ட பாசமும் இனிமையும் மரியாதையும் நட்பும் இன்று வரையிலும் அதே போலவே தொடர்ந்து வருகிறது. இடையில் ஒரு முறை தன் வலைத்தளத்தில் நடத்திய சமையல் போட்டிக்கு ( Feast of Sacrifice Event) என்னை நடுவராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரின் விருப்பத்திற்கிசைந்து நடுவராக வேலை செய்த போது எனக்குக்கிடைத்த மகிழ்வான தருணங்களுக்கு நான் இங்கே என் அன்பு கலந்த‌ நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது வரவிருக்கும் பொங்கலுக்காக சில வரிகள் எழுதுமாறு அவர் கேட்டுக் கொண்டதால் ஆசியாவின் வலைத்தளத்தில் ஒரு பங்கேற்பாள‌ராக நான்...!

இதோ அக்காவின் சிறப்பு விருந்தினர் பகிர்வு:-

பொங்கல் என்றைக்குமே ஒரு மகிழ்வான, புத்துணர்ச்சி தரும் பண்டிகை! சின்ன வயதில் கரும்புத் துண்டோடும் பட்டுப் பாவாடையுடனும் குதித்தோடிய நாட்கள்! இள‌ம் பருவத்தில் வாசல் அடைத்து வண்ணக்கோலம் போட்டு, பார்த்துப் பார்த்து பரவசமடைந்த நாட்கள்! திருமண‌த்திற்குப்பின் புகுந்த வீட்டில் மாமியார், கொழுந்தனார்கள், குழந்தைகள் நடுவே, வீட்டுப்பெண்களுடன் சேர்ந்து பண்ணையாட்களுக்கு பொங்கலும் கரும்பும் தந்து மகிழ்ந்த நாட்கள்! இங்கே பாலைவன நாட்டிற்கு வந்த பிறகு ஊரும் பொங்கலும் அதன் சிறப்புகளும் வெகு தூரத்திலிருந்தாலும் இங்கே குடும்பத்தை விட்டுப்பிரிந்து தனிமையில் ஊர் நினைவில் வாடும் நண்பர்கள் பலரை பொங்கலன்று அழைத்து சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் குழம்பு என்று வயிறார சாப்பிட வைத்து அனுப்பிய நாட்கள்! இப்படி பொங்கல் பண்டிகை வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாக வந்து செல்கிறது!தைப்பொங்கல்  அன்று பொங்கல் பொங்குவதும்கூட பல வீடுகளிலும் பல ஊர்களிலும் மாவட்டங்களிலும் வேறுபடுகின்றன. சிலர் விடியற்காலையே, சூரியோதயம் வரும் நேரம் பொங்கலைப் பொங்குகிறார்கள். சிலர் அந்தி சாயும் நேரம் பொங்கல் பொங்குகிறார்கள். சிலர் நல்ல நேரம் பார்த்து, பெரும்பாலும் உச்சியில் கதிரவனின் கிரணங்கள் மின்னும்போது பொங்கல் பொங்குகிறார்கள். எப்படிப் பொங்கினாலும் பண்டிகையின் இனிமையும் பொங்கலின் சுவையும் வேறுபடுவதில்லை!

கிராமங்களில் மண் அடுப்பில் பொங்கல் பொங்குவது தான் தனிச்சிறப்பு. அதற்கான அடுப்பு தயாரிக்கும் பணி முதல் நாளே நடக்கும். செங்கற்களாலும் களி மண்ணாலும் அடுப்பை தயாரித்து, மெழுகி, அதன்மீது கோலம் போட்டு அழகாக்கி விடுவார்கள். சிலர் வீட்டு முகப்பில் இரண்டு பொங்கல் பானைகள் வைத்து சமைக்கும் அளவிற்கு மண்ணைத் தோண்டி, மேடை கட்டி பானைகள் பதிய கொண்டையும் வைத்து களிமண்ணால் பூசி விடுவார்கள்.


பொங்கலுக்கு ஏற்றது கிராமங்களில் தயாராகும் புதிய மண் பானைகள் தான். பல முறை சுத்தம் செய்து கழுவிய பானையின் வெளிப்புறம் மாக்கோலமிட்டு, இஞ்சிக் கொத்துக்கள், மஞ்சள் கொத்துக்கள் வைத்துக் கட்டி, பாலும் தண்ணீருமாய் பானையினுள் ஊற்றி அது பொங்கி வந்ததும் பொங்கலோ பொங்கல்என்று கூவி, புத்தரிசியைக் கழுவிக் கொட்டி புது வெல்லமும் புத்துருக்கு நெய்யும் சேர்த்து பொங்கல் செய்வார்கள். பச்சரிசியும் தேங்காய்த்துருவலும் உப்பும் சேர்த்து வெண் பொங்கல் சமைப்பார்கள். ஏழெட்டு வகைகள் காய்கறிகள் சேர்த்து குழம்பு வைப்பார்கள். சிலர் இதைக் குழம்பாக செய்யாமல் பொரியலாக செய்து பக்க துணைக்கு சாம்பாரும் செய்வார்கள்.

என் புகுந்த வீட்டில் என் மாமியார் சர்க்கரைப் பொங்கலுக்கு என்று வாழைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கி, அவரை, சிறு கிழங்கு, கத்தரி, தக்காளி எல்லாம் போட்டு ஒரு பருப்புக்குழம்பு செய்வார்கள். இது சூடான நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கும்  கட்டித்தயிர் விட்டுப் பிசைந்த வெண் பொங்கலுக்கும் ஏற்ற சுவையான பக்கத்துணையாக இருக்கும். அந்தப் பொங்கல் குழம்பைத்தான் இங்கே குறிப்பாகத் தரப்போகிறேன்.

பொங்கல் குழம்பு:-


தேவையான பொருள்கள்:

பருப்பு- முக்கால் கப்
புளி- 2 எலுமிச்சம்பழ அளவு
தேங்காய்த்துருவல்- 1 கப்
மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தூள்‍ 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கை
கொத்தமல்லி[அரிந்தது]- 1 கப்
பெரிய துண்டாக அரிந்த பரங்கிக்காய்- 1 கப்
பெரிய துண்டாக அரிந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 1 கப்
பச்சை மொச்சைக்கொட்டை- 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி- ஒன்றரை கப்
இரண்டாக அரிந்த அவரைக்காய்- 1 கப்
பெரிய துண்டாக அரிந்த வாழைக்காய்- 1 கப்
தேவையான உப்பு

கீழ்க்கண்ட பொருட்களை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும்:

ஒரு கை பச்சரிசி, 1 ஸ்பூன் மிளகு,1 ஸ்பூன் சீரகம், 2 ஸ்பூன் சோம்பு

செய்முறை:

பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
புளியைப் போதிய நீரில் ஊற வைத்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை போதுமான நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். காய்கள் பாதி வெந்ததும் உப்பு, தூள்கள், புளி நீர் சேர்க்கவும்.
சில நிமிடங்கள் கழித்து வெந்த பருப்பையும் தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.
குழம்பு நன்கு கொதித்து வரும்போது அரைத்த பொடியை கொஞ்சம் கொஞ்சமாக தூவி கலக்கவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து இறக்கவும்.


மிகவும் ருசியான இந்த பாரம்பரியம் மிக்க பொங்கல் குழம்பை நீங்களும் வரும் பொங்கல் திருநாளன்று செய்து பார்த்து கருத்துக்களைப் பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் அழைப்பை அன்புடன் ஏற்று சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொண்டு கௌரவித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.மனமார்ந்த நன்றி மனோ அக்கா.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

மீண்டும்  அடுத்த வாரம் அசத்தலான பகிர்வோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

முக்கியக் குறிப்பு:
சிறப்பு விருந்தினர் பகிர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் asiyaomar @gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

28 comments:

Menaga sathia said...

பொங்கல் ஸ்பெஷலா மனோ அம்மாவின் குறிப்பு சூப்பர்ர்..அவரைப் பற்றி மேலும் தெரிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி...

Thenammai Lakshmanan said...

மிகவும் ருசியான பொங்கல் குழம்பு.. பகிர்வுக்கு நன்றி ஆசியா..

கலக்கல் ரெசிபி மனோ சுவாமிநாதன்.. என்னது 13 லட்சமா.. யம்மாடியோவ்.. :)

மனோ சாமிநாதன் said...

ஆசியா! எல்லாவற்றையும் அழகாய்த்தொகுத்து மிகவும் சிறப்பாக பதிவிட்டிருக்கிறீர்கள்!!மனமார்ந்த பாராட்டுக்கள்!!

ஸாதிகா said...

மனோ அக்காவின் பேட்டியும் குறிப்பும் அருமை.தொகுப்பு மிகவும் ரசிக்கும் படி உள்ளது.பங்கேற்ற மனோ அக்காவுக்கும்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்,ஜலீலாவின் வலைப்பூவிலும்,உங்களது வலைப்பூவிலும் முத்துச்சிதறல் மின்னிக்கொண்டுள்ளது...:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

// திருமதி மனோ சாமிநாதன் ,மனோ அக்கா என்று தமிழ் வலையுலகில் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான மூத்த பதிவர், பசுமை கொஞ்சும் தஞ்சை மண்ணை பூர்வீகமாகக் கொண்டவர், சமையற்கலை நிபுணர், பத்திரிக்கையாளர், ஓவியர், இசையில் ஆர்வமுள்ளவர் இன்னும் அவரிடம் கொட்டிக் கிடைக்கும் திறமைகள் பல. அவர்களை சிறப்பு விருந்தினராக இந்த பொங்கல் சமயம் அழைத்து கௌரவிப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.//

மிகச்சிறப்பானவரை தான் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

அவருக்கும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

படிக்க மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

எல்லோருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

priyasaki said...

மனோ அக்காவை அறுசுவையில் மூலம் தெரியும்.மனோ அக்கா மிக அழகாக தைத்திருநாள் பற்றி கூறியிருக்கிறார் கள்.குழம்பு குறிப்பு அருமை.
ஆசியா அருமையான தொகுப்பு.பதிவுக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

Super recipe and thanks Asiya. Happy pongal to u & Mamo mem.

Nice pongal story too.

சே. குமார் said...

மனோ அம்மாவின் பொங்கல் குழம்பு சூப்பரோ சூப்பர்.

Asiya Omar said...

மேனகா வாங்க, கருத்திற்கு மிக்க நன்றி.

தேனக்கா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகிழ்ச்சி.

Asiya Omar said...

மனோ அக்கா உங்கள் பகிர்வு பொங்கல் பற்றிய செய்தி குறிப்புக்களுடன், அருமையான சமையலோடு அசத்தலான தொகுப்பு.மீண்டும் மனமார்ந்த நன்றி.மகிழ்ச்சி.

Asiya Omar said...

ஸாதிகா வாங்க,கருத்திற்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
// ஜலீலாவின் வலைப்பூவிலும்,உங்களது வலைப்பூவிலும் முத்துச்சிதறல் மின்னிக்கொண்டுள்ளது...:)//
ஆமாம் தோழி,நான் முன்பே இந்தப் பகிர்வை ரெடி செய்து பொங்கல் என்று வரும் பதிவிடலாம் என்று காத்திருந்தேன்,தற்செயலாக பார்த்தால் ஜலீலாவின் பக்கமும் மனோ அக்காவின் குறிப்பு.இரட்டிப்பு மகிழ்ச்சி.

Asiya Omar said...

வை.கோ சார் வாங்க, கருத்திற்கு மன்மார்ந்த நன்றி.பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

Asiya Omar said...

ப்ரியசகி வாங்க,வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

விஜி வாங்க நீண்ட நாள் கழித்து வந்திருக்கீங்க, வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி,மகிழ்ச்சி.

Asiya Omar said...

சே.குமார் வாங்க, மனோ அக்காவின் இந்தக் குறிப்பு நிச்சயம் செய்து பார்க்க வேண்டிய குறிப்பு,செய்முறையை பார்த்தாலே தெரியும். கருத்திற்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

மனோ அவர்கள் பன்முக திறமை வாய்ந்தவர்.
அவரின் பொங்கல பற்ரிய பகிர்வும், பொங்கல் குழம்பும் அருமை.
அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நன்றி ஆசியா.

Asiya Omar said...

கோமதிக்கா வாங்க, வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்திற்கு மன்மார்ந்த நன்றி.

Snow White said...

அருமையாக இருக்கு ... பொங்கலுக்கு அழகா வெளியிட்டு இருக்கிங்க ..

Jaleela Kamal said...

மனோ அக்கவை பற்றி மிக அருமையாக தொகுத்து எழுதி இருக்கீஙக ஆசியா.

பொங்கல் குழம்பு மிகவும் அசத்தலாக இருக்கிறது.

அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கு சேர்த்து இருப்பது ரொம்ப சூப்பர்..

அம்பாளடியாள் வலைத்தளம் said...

பொங்கலோ பொங்கல் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
சொந்தங்களே !

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

ஸ்னோ ஒயிட் கருத்திற்கு மிக்க நன்றி.

ஜலீலா வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி,நன்றி.

Asiya Omar said...

அம்பாளடியாள் வாங்க, வாழ்த்திற்கு மகிழ்ச்சி,மிக்க நன்றி.

தனபாலன் சார் தகவலிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு.... பொங்கல் குழம்பு சாப்பிட்ட திருப்தி.....

மனோ சாமிநாதன் மேடம் அவர்களுக்கும் வாழ்த்துகளுக்கும்..

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகளும்! [தட்டச்சு பிழை பொறுத்தருள்க:)]

Asiya Omar said...

மிக்க நன்றி சகோ.வருகைக்கும் வாழ்த்திற்கும் மகிழ்ச்சி.

Balakumaran Balasingkam said...

எனக்கு ஒரே பருப்பு குழப்பம் சாம்பார் பருப்பா ஆசியா அக்கா -surejinibala-

Asiya Omar said...

Surejinibala வருகைக்கு நன்றி.இது பொங்கல் குழம்பு.செய்து பாருங்க.